பாடத்திட்ட நோக்கம்
வெப்ப தகவமைப்புத் தீர்வுகளை ஆராய்தல் என்ற பாடத்திட்டத்திற்கு வரவேற்கிறோம்! வெப்பத்திற்கு மீள்திறன் கொண்ட தீர்வுகளால் பல்வேறு சுகாதார, பொருளாதார, கல்வியியல் மற்றும் கட்டமைப்பு-தொடர்பான பலன்களை வழங்க முடியும். இணைப்-பலன்களில் காற்றுத் தரம் மேம்படுதல், எரிசக்திப் பயன்பாட்டைக் குறைத்தல், மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல் ஆகியவை அடங்கும். எனினும், குளிர்வித்தல், கல்வியியல், மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பாக கிடைக்கக்கூடிய உக்திகள் மற்றும் தொழில்நுட்பங்களின் வகைகள் நம்மைத் திணறச் செய்யக்கூடும்.
உங்களது உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப பயனுள்ள தீர்வுகளை அடையாளம் காண்பதற்கு இந்த பாடத்திட்டம் உங்களுக்கு உதவும். இந்த நிலையின்போது, வெற்றிகரமாக வடிவமைப்பதற்கும், செயல்படுத்துவதற்கும், மற்றும் கண்காணிப்பதற்கும் தேவையான பங்காளர்கள் மற்றும் வளங்களை நீங்கள் அடையாளம் காண்பீர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மதிப்பீட்டு நிலையின் போது அடையாளம் காணப்பட்ட நலிவுநிலைகள் மற்றும் தாக்கங்களை நேரடியாக கையாள வேண்டும்.
இந்த பாடத்திட்டத்திலுள்ள அத்தியாவசிய நடவடிக்கைகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள்
நடவடிக்கைகள்
-
முக்கிய சமூகத் தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் அதிகாரிகள், மற்றும் துறைசார்ந்த வல்லுனர்களிடம், உங்களது எல்லைக்குட்பட்ட பகுதிக்கு எந்த வெப்பத்திற்கு மீள்திறன் கொண்ட தீர்வுகள் பொருத்தமானது என்பதைப் பற்றி விவாதித்தல்.
-
குறிப்பிட்ட தீர்வுகளைச் செயல்படுத்துவதில் குறைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கக்கூடிய நிதி அமைப்புகள், கொள்கைகள் மற்றும் சுற்றுச்சூழ்நிலைகளை அடையாளம் காணுதல்.
-
நகர்புறத்தில் பசுமைப் பகுதியை உருவாக்குதல், குளிர்ச்சியான மேற்கூரைகள், முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகள் மற்றும் சமுதாயத் திட்டங்கள் போன்றத் தேர்வுகளில் இருந்து பொருத்தமான தீர்வுகளின் தொகுப்பினைத் தேர்வு செய்தல்.
வெளிப்பாடுகள்
-
தற்போதைய கொள்கைகள் மற்றும் திட்டங்களையும் வெப்ப மீள்திறன் மீது அவற்றின் பாதிப்பு குறித்து மதிப்பாய்வு செய்தல்.
-
பங்குதாரர்களுடன் விவாதித்ததன் அடிப்படையில் பொருத்தமான தீர்வுகளின் பட்டியல்.
-
தீர்வுகளை செயல்படுத்துவதில் உள்ள குறைகள் மற்றும் வாய்ப்புகளின் பட்டியல்.
பலன்கள்
-
உங்களது சூழ்நிலைக்கு பொருத்தமான வெப்பத்திற்கு மீள்திறன் கொண்ட தீர்வுகள் மற்றும் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகளையும் அடையாளம் காணுதல்.
-
கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்த ஆதரவளிக்கக்கூடிய சாதகமான சூழ்நிலைகளை புரிந்துகொள்ளுதல்.
-
கொள்கைகள் மற்றும் நடவடிக்கை- சார்ந்த தீர்வுகளை தகவமைப்பதிலும் செயல்படுத்துவதிலும் உள்ள தடைகளைப் புரிந்துகொள்ளுதல்.
-
தீர்வுகளை இணைந்து-உருவாக்க சமூக மக்களுடன் கூட்டாக இணைதல்.
-
தீர்வுகளை வடிவமைக்க, செயல்படுத்த மற்றும் கண்காணிக்க என்ன தொழில்நுட்ப திறன்கள் மற்றும் ஆற்றல் தேவை என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
கண்ணோட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அத்தியாவசிய செயல்பாடுகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள் இந்த பாடத்திட்டத்தின் மீதமுள்ள பகுதி முழுவதும் விவரிக்கப்பட்டுள்ள அதிக முழுமையான அணுகுமுறையின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கையின் விரிவான மற்றும் ஆழமான நிலையை நேரம், வளங்கள் மற்றும் திறன் ஆகியவைதான் கட்டுப்படுத்துகிறது என்று எங்களுக்குத் தெரியும். இந்த பாடத்திட்டங்களை ஆராயத் துவங்குவதும் உங்களது சூழ்நிலைக்கு எந்த தீர்வுகள் பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கருதுவதும் உங்களது பகுதியின் வெப்ப மீள்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படிநிலையாகும். எந்த நிலையிலும், கேள்விகள் மற்றும் கருத்துகள் இருந்தால் இந்த பக்கத்தின் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்புப் படிவத்தைப் பயன்படுத்தி அர்ஷ்ட்-ராக்கைத் தொடர்புகொள்ளுங்கள்.
தீர்வுகளை அடையாளம் காணுதல்
நீங்கள் இதுநாள் வரையில் பணியாற்றி வந்த சமூகத் தலைவர்கள், துறை சார்ந்த வல்லுனர்கள், மற்றும் இதர பங்குதாரர்களுடன் உங்களது சூழ்நிலையில் எந்த வெப்பத்திற்கு மீள்திறன் கொண்ட தீர்வுகள் பொருத்தமானது என்பதை விவாதித்தல். ஒரு தீர்வை செயல்படுத்துவதைக் காட்டிலும் ஒரு ஒருங்கிணைந்த, பல-தீர்வு அணுகுமுறையைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்தல். எந்த ஆபத்துக்கள் அதிகபட்ச தீங்குகளை ஏற்படுத்துகிறது என்பன போன்ற உங்கள் உள்ளூர் சூழ்நிலையைப் பொறுத்து சரியான தீர்வுகள் என்பது வேறுபடக்கூடும். எனினும், ஒரு அணுகுமுறையில் முதலீடு செய்வதைக் காட்டிலும் விரிவான முறையில் செயல்படுத்தக்கூடிய பல்வேறு அணுகுமுறைகளை ஒன்றிணைத்து செயல்படுத்துவது அவற்றின் பரஸ்பர ஆதரவுப் பலன்களின் காரணமாக அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும். தனிப்பட்ட பாகங்களைக் காட்டிலும் ஒன்றிணைந்த பலன்கள் அதிகமானதாக இருக்கும்.
இன்னும் விரிவாக கூறுவதென்றால், மீற்திறனை வளர்க்கின்ற மற்றும் அபாயத்தைக் குறைக்கின்ற பல்வேறு வகையான உக்திகளை ஒன்றிணைக்கின்ற ஒரு நெகிழ்வுத்தன்மை கொண்ட தகவமைத்தல் திட்டம் என்பது மிகக்கடுமையான வெப்பத்தால் ஏற்படும் ஆபத்துக்களைக் கையாள்வதில் சிறந்த அணுகுமுறையாக இருக்கும். தற்போதுள்ள பல்வேறு கொள்கைகள், திட்டங்கள், மற்றும் ஒழுங்குமுறைகள் வெப்பத்திற்கான மீற்திறனை வளர்க்கும் உங்களது இலக்குகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கு அல்லது பசுமைப் பகுதிக்கான அணுகலை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நகரின் முயற்சிகள் ஒரு வெப்ப ஆரோக்கிய கண்ணோட்டத்தை ஒன்றிணைக்கவும் மேலும் இத்தகைய முயற்சிகள் நகரின் வெப்பமான பகுதிகளை இலக்காகக் கொண்டு செயல்படுகிறதா என்பதை பரிசீலிக்கவும் வாய்ப்புகளை வழங்குகிறது. குறைந்த மின்னாற்றலைப் பயன்படுத்தும் கட்டிடங்களை உருவாக்குவது மக்களை கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது மட்டுமல்ல, சமூக மக்களின் பொருளாதார மற்றும் மின்னாற்றல் சவால்களையும் குறைக்கிறது. குறிப்பிட்ட தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பங்களையும் அடையாளம் காணும்போது, மற்ற எந்த சவால்களை உங்களது சமூகம் எதிர்கொள்கிறது என்பதையும் அவற்றை வெப்பக் கொள்கைகளால் எவ்வாறு கையாள முடியும் என்பதையும் பரிசீலிக்கவும்.
ஒருசில தீர்வுகள் செயல்படுத்துவதற்கு நீண்ட கால அளவைக் கொண்டதாகவும் அதிக செலவாகக் கூடியதாகவும் இருக்கும் அதனால் அது சாத்தியமானதாக இருக்காது. இந்த பங்குதாரர்களுடன் பணியாற்றி உங்களது பருவநிலை மற்றும் நிலப்பரப்புக்கு எந்த நடவடிக்கைகள் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்பதை அறிவதற்கான தற்போதைய ஆராய்ச்சியையும் அத்துடன் வாய்ப்புள்ள செயல்படுத்தும் கால அளவுகள் மற்றும் நிதி ஆதாரங்களையும் மதிப்பாய்வு செய்யுங்கள்.
வளங்கள்
வெப்ப மீள்திறன் கொண்ட நகரங்களின் பலன்கள் கருவி
- உலகெங்கும்
ஒரு நகருக்கு வெப்ப மீள்திறன் கொண்ட பலன்களுக்கு கிடைக்கக்கூடிய ஆரோக்கிய, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பலன்களை அளவிடுவதற்கு, சி40 மற்றும் ராம்போல் மூலமாக தயாரிக்கப்பட்ட வெப்ப மீள்திறன் கொண்ட நகரங்களின் பலன்கள் கருவியைப் பாருங்கள்.
வெப்பத்தை வெற்றிகொள்ளுதல்
- உலகெங்கும்
குளிர்வித்தல் தீர்வுகளை நகரங்களில் எளிதாக செயல்படுத்துதல், அதன் தடைகள், மற்றும் தாக்கங்கள் குறித்த தகவலுக்கு, குளிர்ச்சிக் கூட்டணி, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம், ஆர்.எம்.ஐ, பருவநிலை மற்றும் மின்சக்திக்கான மேயர்களின் உலகளாவிய உடன்படிக்கை, மிஷன் இனோவேஷன், மற்றும் சுத்தமான குளிர்வித்தல் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியோரால் உருவாக்கப்பட்ட வெப்பத்தை வெற்றிகொள்ளுதல் கைப்புத்தகத்தின் 34- 38 மற்றும் 56-57 பக்கங்களைப் பார்க்கவும்.
நகர்புற வெப்ப மீற்திறனுக்கான திட்டமிடுதல்
- அமெரிக்கா
நகர்புற வெப்ப இலக்குகள் மற்றும் உங்களது திட்டமிடுதல் முயற்சிகளுக்கான ஒரு கட்டமைப்பினை எப்படி உருவாக்குதல் என்பது குறித்த தகவலுக்கு, அமெரிக்க திட்டமிடுதல் அமைப்பு வழங்கும் நகர்புற வெப்ப மீற்திறனுக்கான திட்டமிடுதலின் 38-42 பக்கங்களைப் பாருங்கள்.
தடைகளைத் தாண்டுதல்
விழிப்புணர்வின்மை
உள்ளூர் அதிகாரிகள், தொண்டு நிறுவனம், மற்றும் குடியிருப்போர், பெரும்பாலும் வெப்பத்தின் தாக்கத்தைப் பற்றி விழிப்புணர்வின்றி இருப்பார்கள் அல்லது அதைக் குறைவாக மதிப்பிடுவார்கள், மேலும் அதை முக்கியமற்றதாக அல்லது வழக்கமான விஷயமாக பார்ப்பார்கள். மதிப்பீட்டு நிலையில் விவாதிக்கப்பட்டது போல் ஒரு வெப்ப இனம்காணுதல் மதிப்பாய்வு அல்லது நலிவுநிலை மதிப்பாய்வு ஆகியவற்றை நடத்துவது வெப்பத்தின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதார தாக்கங்களை அளவிட்டு அதை முன்னிலைக்கு கொண்டுவரும். இந்த மதிப்பீடுகள் அல்லது ஒரு வெப்ப தகவல்தொடர்புகள் இயக்கத்தின் ஒரு பகுதியாக பங்குதாரர் ஈடுபாடும் கூட இந்த பிரச்சனை குறித்த புரிதல் மற்றும் உத்வேகத்தை உருவாக்கும்.
நிதி மற்றும் நிதி ஆதரவுக்கு அணுகல் இன்மை
வெப்பத் தகவமைத்தல் மற்றும் தயாராதல் நடவடிக்கைகள் என்பது எளிய/குறைந்த-செலவாவது முதல் பெரிய அளவிலான மறுமேம்பாட்டு மற்றும் கட்டமைப்புத் திட்டங்கள் வரை இருக்கக்கூடும், இத்தகைய திட்டங்களுக்கு அரசு நிதி ஆதாரங்கள், கொடையளிக்கும் ஆதாரங்கள் அல்லது இதர முதலீடுகளைக் கண்டறிவது கடினமானதாக இருக்கக்கூடும். ஒரு திட்டத்திற்கான திட்ட முன்மொழிவுகளை உருவாக்கும் போது, தற்போதுள்ள வெப்பத்திற்கான செலவுகளையும் (எ.கா. முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரம் மற்றும் மின்னாற்றல் போன்ற கட்டமைப்பு, குறையக்கூடிய தொழிலாளர் உற்பத்தித் திறன்), இந்த திட்டத்தின் மூலமாக வாய்ப்புள்ள சேமிப்புகளையும் (எ.கா. மின்சார கட்டணங்கள் குறைதல்) இவை ஒன்றிணைவதன் மூலமாக காலப்போக்கில் முதலீட்டு செலவுகளைக் குறைக்கும் என இந்த இரண்டைப் பற்றி மதிப்பாய்வு செய்து அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள்.
உரிமை கொள்ளும் தன்மை இல்லாமை
வெப்பத்தின் காரணமாக பொது சுகாதாரம், கட்டமைப்பு, பேரிடர் மேலாண்மை, மற்றும் இதர துறைகளிலும் ஏற்படும் பாதிப்புகளின் காரணமாக, இது எந்தவிதமான ஒரு குறிப்பிட்ட “உரிமையாளர்” அல்லது பொறுப்பான அரசு நிறுவனம் அற்றதாக கைவிடப்படுகிறது. ஒருசில நகரங்கள் மற்றும் பிராந்தியங்கள், வெப்பத்திற்காக தயாராகும் போது அந்த விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டிய இது தொடர்பான பல்வேறு வகையான அமைப்புகள், நிறுவனங்கள், மற்றும் சமூகங்கள் என அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைக்கின்ற ஒரு வெப்ப சுகாதார பணிக்குழுவை உருவாக்குவதன் மூலமாக இந்த இடைவெளியைக் கையாள்கிறது. மற்றவை வெப்பத்தின் தாக்கங்களைப் பற்றி தெரிவிப்பதற்கும் வெப்பம்- சார்ந்த கொள்கைகள் மற்றும் திட்டங்களில் அமைப்பின் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும் ஒரு முதன்மை வெப்ப அதிகாரியை நியமித்துள்ளன.
சமவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் நீதியில் முதலீடு செய்தல்
சுற்றுச்சூழல் மீட்பு நடவடிக்கை செயல்முறையின் போது அல்லது பருவநிலைக்கு-தகவமைக்கும் கட்டமைப்பு தற்போதுள்ள குடியிருப்போரை எதிர்மறையான முறையில் பாதிக்கும்போது பசுமை பண்படுத்துதல் என்பது நடைபெறுகிறது. உதாரணமாக, புதிய பூங்காக்கள் அல்லது குளிர்ச்சியான தாழ்வாரங்கள் உருவாவதன் காரணமாக சொத்தின் மதிப்புகள், வாடகை ஆகியவை அதிகரிக்கும், தற்போதுள்ள கட்டிடங்கள் இடிக்கப்படும், மேலும் தற்போது குடியிருப்போர் உடனடியாக அல்லது காலப்போக்கில் இடம்பெயர்வதற்கு காரணமாக அமையக்கூடும். இந்த எதிர்மறைப் பலன்கள் ஒரு குறிப்பிட்ட இனம், வருமான நிலை, அல்லது சமுதாய குழுவைச் சேர்ந்த குடியிருப்போருக்கு பெரும்பாலான சமயங்களில் அளவுக்கு அதிகமான தீங்கினை ஏற்படுத்தும்.
ஒரு குறிப்பிட்ட வெப்ப மீள்திறன் திட்டத்தின் வகை மற்றும் இடத்தை அடையாளம் காணும்போது, அதிகபட்ச வெப்பநிலைகளைக் கொண்ட, குறைந்தபட்ச குளிர்ச்சியூட்டம் கட்டமைப்பு வளர்ச்சி கொண்ட, மற்றும் வெப்பத்திற்கு- நலிவடையக் கூடிய குடியிருப்போரை அதிக எண்ணிக்கையில் கொண்ட நகரின் பகுதிகளை பரிசீலிப்பதுடன் கூடுதலாக, திட்டத்தின் விரிவான தாக்கங்களையும், அது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தற்போது காணப்படுகின்ற ஒடுக்கப்படுதல் மற்றும் இடப்பெயர்ச்சி என்கின்ற சிக்கலுக்கு இது எந்த வகையில் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தவறான தகவமைப்புப் பலன்களைத் தவிர்ப்பதற்கு திட்டமிடுதல் செயல்முறையின் ஆரம்பத்தில் இருந்தே நேரடியான மற்றும் நீடித்த சமூக மக்கள் ஈடுபாடு என்பது அவசியமாகும். இதற்கு சமூக உறுப்பினர்கள் இந்த திட்டத்தை பயனுள்ளதாக பார்க்க வேண்டும் மேலும் தங்களது நேரம் மற்றும் முயற்சியை இதில் முதலீடு செய்ய தயாராக இருக்க வேண்டும். வாய்ப்புள்ள பலன்களைத் தெளிவாக குறிப்பிடுதல், இந்த செயல்முறையை இணைந்து-முன்னின்று நடத்த சமூக உறுப்பினர்களை அழைத்தல், மற்றும் சமூக உறுப்பினர்கள் இதற்காக வழங்கிய தங்களது நேரத்திற்கு ஏதேனும் ஈட்டுத்தொகை வழங்குதல் ஆகியவை இந்த முயற்சியை மேம்படுத்த உதவும்.
வளங்கள்
நடைமுறையில் உள்ள அனைத்தையும் உள்ளடக்கிய பருவநிலை நடவடிக்கை
- உலகெங்கும்
வெப்பம்- சார்ந்த திட்டங்களில் சுற்றுச்சூழல் நீதி மற்றும் குடிமக்கள் ஈடுபாட்டை செயல்படுத்திய நகரங்களின் உதாரண ஆய்வுகளுக்கு, சி40 வழங்கும் நடைமுறையில் உள்ள அனைத்தையும் உள்ளடக்கிய பருவநிலை நடவடிக்கையின் 24-37 பக்கங்களைப் பார்க்கவும்.
வெப்ப நடவடிக்கை திட்டமிடுதல் வழிகாட்டி
- அமெரிக்கா
பல்வேறு வகையான சமூக பணிமனைகள் வாயிலாக வெப்பத் திட்டமிடுதல் குறித்து மூன்று பகுதிகளில் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பங்காளர் நிறுவனங்கள் சமூகமக்களை எவ்வாறு ஈடுபடுத்தினர் என்பது குறித்த ஒரு கண்ணோட்டத்திற்கு, பெருநகர ஃபீனிக்ஸ் சுற்றுப்புறப் பகுதிகளுக்கான வெப்ப நடவடிக்கை திட்டமிடுதல் வழிகாட்டியின் 9-12 பக்கங்களைப் பாருங்கள்.
குளிர்ச்சியான நகரங்களுக்கான முதல் புத்தகம்
- உலகெங்கும்
தீர்வுகள் அல்லது நகர்புற குளிர்ச்சிக்கான ஒரு கண்ணோட்டத்திற்கு, உலக வங்கி வழங்கியுள்ள குளிர்ச்சியான நகரங்களுக்கான முதல் புத்தகம்: அதிகமான நகர்புற வெப்பத்தைக் குறைத்தல் என்பதன் 3ஆம் அத்தியாயத்தைப் பாருங்கள்.
பொதுவான தயாராதல் மற்றும் தகவமைத்தல் தீர்வுகள்
நேரடி மற்றும் மறைமுக குளிர்வித்தல்
நேரடி குளிர்வித்தல் என்பது வெப்பத்தைக் குறைப்பதற்காக மின்னாற்றலைப் பயன்படுத்தும் முறைகளைக் குறிக்கிறது, அதேவேளை மறைமுக குளிர்வித்தல் என்பது உட்புற காற்றின் வெப்பநிலைகளைக் குறைக்கின்ற விரிவான கட்டிட பொருட்கள், வடிமைப்புத் தேர்வுகள், மற்றும் இயற்கைத் தீர்வுகளைக் குறிக்கிறது, இதை பெரிய அளவில் பயன்படுத்தும் போது வெளிப்புற காற்றின் வெப்பநிலைகளையும் குறைக்கும். நேரடி குளிர்வித்தல் முறைக்கான உதாரணங்களில் ஏர் கண்டிஷனிங், மின்விசிறிகள் மற்றும் மாவட்ட குளிர்வித்தல் ஆகியவை உள்ளடங்கும், மேலும் மறைமுக குளிர்வித்தல் முறைகளில் ஒரு கட்டிடத்தின் மேற்கூரைப் பரப்பினை மாற்றுதல் அதன் மூலமாக அதிகமான சூரிய ஒளி பிரதிபலிக்கப்பட்டு அந்த கட்டிடத்தில் குறைவான வெப்பம் மட்டுமே கிரகிக்கப்படும் முறை, அல்லது ஜன்னல்களில் அல்லது கட்டிடங்களைச் சுற்றி நிழலை அதிகரித்தல் ஆகியவை உள்ளடங்கும்.
- நேரடி குளிர்வித்தல் என்பது வழக்கமாக மாற்றத்தக்கதாகும், அதனால் இது மிகவும் கடுமையான வெப்ப நாட்களுக்கு, முக்கியமாக வெப்ப பாதிப்புக்கு உடல்ரீதியாக பாதிக்கப்படக்கூடிய தனிநபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனினும், இந்த நேரடி முறைகள் மின்சக்தியைப் பயன்படுத்தும், மேலும் இதன் அதிக மின்சக்திச் செலவுகள் குறைந்த-வருமானமுள்ள மக்கள் இதனைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும். கூடுதலாக, பல மக்களுக்கு ஏர் கண்டிஷனர்கள் அல்லது அவற்றை இயக்குவதற்கான மின்சக்தி ஆகியவற்றுக்கு அணுகல் இருப்பதில்லை. இறுதியாக, ஏர் கண்டிஷனிங் முறைகளைப் பயன்படுத்துவது ஒரு பகுதியின் ஒட்டுமொத்த வெப்பநிலையை அதிகரிக்கக் கூடும் (“கழிவு வெப்பம்” என்று அழைக்கப்படுகிறது).
- பசுமைக் கட்டமைப்பு, குளிர்ச்சியான மேற்கூரைகள், அல்லது வெப்பத்தை கிரகித்துக் கொள்வதைக் குறைக்கக்கூடிய மேம்பட்ட கட்டிட வடிவமைப்பு ஆகிய மறைமுக குளிர்வித்தல் முறைகளுக்கு வழக்கமான பொருட்களைக் காட்டிலும் ஆரம்பக்கட்ட கட்டுமானத்திற்காக கூடுதல் செலவாகும், மேலும் இதன் வடிவமைப்பிற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அசாதாரணமான வெப்பமுள்ள நாட்களுக்காக மாற்றியமைக்க முடியாது. எனினும், இந்த நடவடிக்கைகளில் நீண்டகாலத்திற்கு பார்க்கும் போது மின்சக்தி தொடர்பான மிகக்குறைவான செலவாகிறது அல்லது எந்தவிதமான செலவுகளும் இருப்பதில்லை மேலும் இந்த முறையை எங்கெல்லாம் ஸ்திரமான மின்னாற்றல் விநியோக அமைப்புகள் இல்லாமல் இருக்கிறதோ அந்த இடங்கள் உள்பட உலகின் எந்த பகுதியிலும் இதை செயல்படுத்த முடியும்.
மறைமுக குளிர்வித்தல் தேர்வுகள் என்பது குறைந்தது-முதல்-அதிக செலவாகும் முறைகள் வரை உள்ளன மேலும் நீங்கள் தேர்வு செய்யும் தொழில்நுட்பம் என்பது உங்களது உள்ளூர் சுற்றுச்சூழலை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். உதாரணமாக, நகர்புற காடுகளை விரிவுபடுத்துவது குறிப்பிடும்படியான வெப்பக் குறைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் தண்ணீர் குறைவான/வறட்சி- பாதிப்புள்ள சுற்றுச்சூழல்களில் வடிவமைப்பு மேம்பாட்டு முறைகளை உருவாக்குவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். மேலும் உங்களது பகுதியில் உள்ள பாரம்பரிய அல்லது உள்நாட்டு வடிவமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை, அதாவது காற்றோட்டத் தூண்கள் மற்றும் காற்றோட்ட வலைத் தடுப்புகள் போன்றவற்றை வீடுகளையும் அந்த பகுதியையும் குளிர்விக்க பயன்படுத்த முடியும் என்பதை குறித்து பரிசீலிக்கவும்.
வளங்கள்
வெப்பத்தை வெற்றிகொள்ளுதல்
- உலகெங்கும்
மறைமுக குளிர்வித்தல் கோட்பாடுகளின் முதன்மைக் கருத்துகள் (பக்கம் 25) மற்றும் மறைமுக குளிர்வித்தல் தேர்வுகள் மற்றும் அவற்றின் பட்டியலிடப்பட்ட சாதக பாதகங்கள் (அத்தியாயம் 6 மற்றும் 7) ஆகியவை உள்பட மறைமுக குளிர்வித்தல் முறைகளைப் பற்றிய தகவலுக்கு, குளிர்ச்சிக் கூட்டணி, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம், ஆர்.எம்.ஐ, பருவநிலை மற்றும் மின்சக்திக்கான மேயர்களின் உலகளாவிய உடன்படிக்கை, மிஷன் இனோவேஷன், மற்றும் சுத்தமான குளிர்வித்தல் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியோரால் உருவாக்கப்பட்ட வெப்பத்தை வெற்றிகொள்ளுதல் கைப்புத்தகத்தைப் பார்க்கவும்.
குளிர்ச்சியான நகரங்களுக்கான முதல் புத்தகம்
- உலகெங்கும்
நகர்புற குளிர்வித்தல் தீர்வுகளுக்கான ஒரு கண்ணோட்டத்திற்கு, உலக வங்கி வழங்கியுள்ள குளிர்ச்சியான நகரங்களுக்கான முதல் புத்தகம்: அதிகமான நகர்புற வெப்பத்தைக் குறைத்தல் என்பதன் 3ஆம் அத்தியாயத்தைப் பாருங்கள்.
பசுமைக் கட்டமைப்பு
மரங்கள் முதலில் கான்கிரீட் மற்றும் ஆஸ்பால்ட் போன்ற மேற்பரப்புகளுக்கு நிழல் வழங்குவதன் மூலமாக வெப்பம் சேமிக்கப்படுவதைத் தவிர்ப்பதன் மூலமாகவும் அத்துடன் நீரை ஆவியாக்குவதன் மூலமாகவும் சுற்றுச்சூழல் காற்றை குளிர்விக்கிறது. நகர்புறத்தில் உள்ள மரங்களின் மூலமாக காற்றின் வெப்பம் குறைவது என்பது குறிப்பிடும்படியான ஆரோக்கியத் தாக்கங்களைக் கொண்டிருக்கும். அமெரிக்க நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மாதிரி ஆய்வில் நகரத்தின் மர விதானம் ஆண்டுக்கு ஏறக்குறைய 1,200 உயிரிழப்புகளைக் குறைப்பதைக் கண்டறிந்துள்ளது.
வளங்கள்
பசுமைக் கட்டமைப்பு கருவித்தொகுப்பு
- அமெரிக்கா
பசுமைக் கட்டமைப்பு உக்திகள், நிதி ஆதரவு மற்றும் நிதி வழங்கும் திட்டங்களுக்கான அணுகுமுறைகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்திற்கு, ஜார்ஜ்டவுன் பருவநிலை மையத்தின் பசுமைக் கட்டமைப்பு கருவித்தொகுப்பைப் பார்க்கவும்.
பசுமைக் கட்டமைப்பை வடிவமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்
- அமெரிக்கா
வடிவமைப்பு வழிகாட்டிகள், கருவிகள், மற்றும் செயல்படுத்துதல் பரிசீலனைகளுக்கு, அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் பசுமைக் கட்டமைப்பை வடிவமைத்தல் மற்றும் செயல்படுத்துதல் இணைய பக்கத்தைப் பாருங்கள்.
குளிர்ச்சியான மேற்கூரைகள், சுவர்கள் மற்றும் சாலைகள்
தோராயமாக 60 சதவிகித நகர்புற மேற்பரப்புகள் மேற்கூரைகள் மற்றும் நடைபாதைகளால் மூடப்பட்டுள்ளன, மேலும் இந்த மேற்பரப்புகளில் பெரும்பாலானவை பிரதிபலிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதில்லை, அதன் விளைவாக சூரிய ஒளி அதிகமாக கிரகிக்கப்படுகிறது மேலும் இந்த சூரிய சக்தி வெப்பமாக மாற்றப்படுகிறது.
குளிர்ச்சியான மேற்கூரைகள்
- ஃபிலிடெல்ஃபியா நகர மின்னாற்றல் ஒருங்கிணைப்பு நிறுவனத்தின்படி, மேற்கூரைகளின் பிரதிபலிப்பு திறனை அதிகரிப்பது கட்டிடத்தின் வெப்பநிலைகளை 40° ஃபேரன்ஹிட் வரைக் குறைக்க முடியும் என குறிப்பிடுகிறது. எந்த பகுதிகளில் எல்லாம் அதிக வெப்பநிலைகளின் காரணமாக ஏர் கண்டிஷனர்கள் அதிகமாக பயன்படுத்தப் படுகிறதோ மேலும் மின்சாரத் தேவையும் அதிகரிக்கிறதோ, அங்கே குளிர்ச்சியான மேற்கூரைகள் முக்கியமான தருணத்தின் மின்சக்திப் பயன்பாட்டைக் குறைக்கிறது மேலும் மின்சார கட்டணங்களுக்காக குடியிருப்போர் செலவு செய்யும் பணத்தையும் சேமிக்கிறது.
- அதிக பிரதிபலிப்புத் திறன் கொண்ட மேற்கூரைகள் வெள்ளை மேற்கூறைகளாக இருக்க வேண்டிய தேவையில்லை. மிகவும் சக்திமிக்க பிரதிபலிப்புத் திறன் கொண்ட, ஆனால் சிவப்பு, பச்சை அல்லது சாம்பல் நிறத்தில் உள்ள புதிய மேற்கூரைப் பொருட்கள் உள்ளன.
- காலப்போக்கில், குளிர்ச்சியான மேற்கூரைகள் இயற்கையாகவே தூசி, அழுக்கு மற்றும் இதர பொருட்கள் படிவதன் காரணமாக பிரதிபலிப்புத் தன்மை குறைந்ததாகிவிடும். அப்படி இருந்தாலும், சிலகாலம் ஆன குளிர்ச்சியான மேற்கூரைகள் கூட பாரம்பரிய மேற்கூரைகளை விட அதிக பிரதிபலிப்புத் திறன் கொண்டதாக இருக்கும்.
குளிர்ச்சியான நடைபாதைகள்
- பாரம்பரியமான, கருமையான நடைபாதை போடும் பொருட்கள், குறிப்பாக கோடை காலங்களில் மிக அதிகமான வெப்பநிலைகளை அடையக் கூடும் என்றாலும், குளிர்ச்சியாக இருக்கக்கூடிய அதிக பிரதிபலிப்பு அல்லது ஊடுருவத்தக்க நடைபாதைகளுக்கான தேர்வுகளும் உள்ளன. அதிகபட்ச வெப்பநிலைகள் குறைவதன் விளைவாக அது நீண்டகாலம் நீடிக்கும், மேலும் வெளிர்நிற நடைபாதைகள் இரவில் பார்க்கும் திறனை அதிகரித்து அதன் பலனாக பாதுகாப்பான சாலைகளை உருவாக்கும்.
- ஊடுருவத்தக்க நடைபாதைகள் (அதாவது துளைகளைக் கொண்ட கான்கிரீட், ஊடுருவத்தக்க ஆஸ்பால்ட், வலுவூட்டப்பட்ட புல் நடைபாதைகள்) இயற்கையாகவே ஈரப்பதம் ஆவியாவதன் காரணமாக குளிர்ச்சியடைகிறது.
வளங்கள்
குளிர்ச்சியான மேற்கூரைகள் மற்றும் குளிர்ச்சியான நடைபாதைகளுக்கான ஒரு நடைமுறை வழிகாட்டி
- உலகெங்கும்
குளிர்ச்சியான மேற்கூரைகள் மற்றும் தயாரிப்புத் தேர்வுக்கான ஒரு அறிமுகத்திற்கு, உலகளாவிய குளிர்ச்சியான நகரங்கள் கூட்டணியின் குளிர்ச்சியான மேற்கூரைகள் மற்றும் குளிர்ச்சியான நடைபாதைகளுக்கான ஒரு நடைமுறை வழிகாட்டியைப் பாருங்கள்.
குளிர்ச்சியான மேற்கூரைகள்: உள்ளூர் சமூக மக்களைப் பாதுகாத்தல் மற்றும் மின்னாற்றலை சேமித்தல்
- இந்தியா
இந்தியாவில் பயன்படுத்தப்படும் குளிர்ச்சியான மேற்கூரை வகைகளுக்கான உதாரணங்களுக்கு குளிர்ச்சியான மேற்கூரைகள்:இயற்கை வளங்கள் பாதுகாப்புக் குழு, பெண்கள் வீட்டுவசதி அறக்கட்டளை, மற்றும் இதர பங்காளர்கள் வழங்கியுள்ள உள்ளூர் சமூக மக்களைப் பாதுகாத்தல் மற்றும் மின்னாற்றலை சேமித்தலின் 10 ஆம் பக்கத்தைப் பாருங்கள்.
முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகள்
அதிகமான வெப்பநிலைகள் குறித்து அல்லது முன்கணிக்கப்பட்ட சுகாதார தாக்கங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கக்கூடிய மிகக்கடுமையான வெப்பம் குறித்த எச்சரிக்கை முறைகளை, அதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற வழிகாட்டுதல்களுடன் இணையும்போது, விழிப்புணர்வை அதிகரிப்பதாகவும் உயிர்களைக் காப்பதாகவும் காணப்பட்டுள்ளது.
வளங்கள்
வெப்ப அலைகள் மற்றும் ஆரோக்கியம்
- உலகெங்கும்
வெப்பம் பற்றிய ஒரு ஆரம்பநிலை எச்சரிக்கை அமைப்பை உருவாக்குவது குறித்த ஒரு தொழில்நுட்ப வழிகாட்டுதலுக்கு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக வானிலையியல் நிறுவனத்தின் கூட்டுப் பிரசுரமான, வெப்ப அலைகள் மற்றும் ஆரோக்கியம்: எச்சரிக்கை-அமைப்பு மேம்பாடு தொடர்பான வழிகாட்டுதலைப் பாருங்கள்.
சமூகத் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள்
சமுதாயத்தில் தனிமைப்படுத்தப்பட்ட, மாற்றுத்திறனாளி, அல்லது வயதான மக்களுக்கு வெப்பம்-தொடர்பான தீங்குகள் ஏற்படும் வாய்ப்பை குறைப்பதற்கு பல்வேறு நகரங்கள் சமூகமக்கள்-அடிப்படையிலான திட்டங்கள் மற்றும் தன்னார்வளர் கூட்டமைப்புகளை துவங்கியுள்ளனர். இதில் ஆரோக்கிய நல பரிசோதனைகள், தோழமைத் திட்டங்கள், வெப்ப ஆரோக்கிய அழைப்பு மையங்கள், மற்றும் இதர வகை சமூகமக்கள்-அடிப்படையிலான பரஸ்பர ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
வளங்கள்
ஒரு தோழனாக இருக்கும் திட்டம்
- அமெரிக்கா
உள்ளூர் தன்னார்வளர்களை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு சமூக மக்கள் நிறுவனங்களை ஈடுபடுத்திய ஒரு சமூகமக்கள்-முன்னிலையிலான சமுதாய மீள்திறன் கொண்ட திட்டத்திற்கான ஒரு நியூயார்க்கில் அமைந்துள்ள உதாரணத்திற்கு ஒரு தோழனாக இருக்கும் திட்டத்தை ஆராயவும்.
சிறந்த முறையில் தயாராகியுள்ள அண்டைப்பகுதி மக்கள்
- அர்ஜண்டீனா
வெப்ப அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதில் வயதான தனிநபர்களை ஈடுபடுத்தும் ஒரு உதாரணத்திற்கு பியூனஸ் ஏர்ஸின் பருவநிலை தகவமைத்தல் திட்டத்தின் 90 ஆம் பக்கத்தைப் பாருங்கள்.
வட்டார கேப்டன்கள்
- அமெரிக்கா
வெப்ப அலைகள் ஏற்படுவதற்கு முன்பு மற்றும் ஏற்படும் சமயத்தில் சமூக ஒருமைப்பாட்டை பலப்படுத்துவதற்கு அக்கம்பக்க பகுதி-நிலையிலான நிர்வாக அமைப்புகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த ஒரு உதாரணத்திற்கு, அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் அதிகபட்ச வெப்பச் சம்பவங்கள் வழிகாட்டி புத்தகத்தின் 29 ஆம் பக்கத்தில் உள்ள ஃபிளிடெல்ஃபியா நகரின் வட்டார கேப்டன்கள் திட்டத்தைப் பற்றி வாசிக்கவும்.
மாவட்ட குளிர்வித்தல்
மாவட்ட குளிர்வித்தல் அமைப்புகள் என்பது வழக்கமாக ஒரு மைய ஆதாரத்தையும் (ஒரு குளிர்விக்கும் தொழிற்சாலை) அதிலிருந்து ஒரு பகுதி முழுவதும் உள்ள கட்டிடங்களுக்கு குளிர்ந்த நீரை விநியோகம் செய்வதற்கான நிலத்தடி குழாய்களின் ஒரு கட்டமைப்பையும் கொண்டிருக்கும். இந்த கட்டிடங்கள் அவற்றின் உட்பகுதியைக் குளிர்விப்பதற்கு அந்த தண்ணீரைப் பயன்படுத்தும், அதன்பின் அந்த தண்ணீர் மீண்டும் குளிர்விக்கப்படுவதற்காக மைய தொழிற்சாலைக்கு அனுப்பப்படும். இந்த அமைப்புகள் இந்த கட்டிடங்களுக்கு குறிப்பிடும்படியான அதிக செயல்திறன் மிக்க குளிர்ச்சியினை வழங்க முடியும். எனினும், மாவட்ட குளிர்வித்தல் முறையை உருவாக்குவதற்கு தேவையான கட்டமைப்பு மற்றும் அங்குள்ள கட்டிடங்களின் அடர்த்தியின் தேவையை மனதில் கொண்டு, உங்களது சமூகத்தில் ஏதேனும் புதிய கட்டுமானப் பணிகள் வர உள்ளதா என்பதையும் இந்த அணுகுமுறையில் முதலீடு செய்யக்கூடிய அளவுக்கு தேவையான மூலதனத்தையும் தொழில்நுட்ப ஆற்றலையும் கொண்டுள்ளதா என்பதை மதிப்பிடுங்கள்.
வாழ்த்துக்கள்! நீங்கள் ஒரு அடிப்படை வெப்ப அபாய மதிப்பீட்டை நடத்துதல் என்பதைப் பூர்த்தி செய்துள்ளீர்கள்.
இந்த பாடத்திட்டத்தில் இருந்து அத்தியாவசிய செயல்பாடுகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்களை மதிப்பாய்வு செய்ய மறக்காதீர்கள்.